சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்
பண் - இந்தளம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ag1F6pra03Q
2.041   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மண் புகார், வான்புகுவர்; மனம்
பண் - சீகாமரம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=DO3apSOzhk0
4.065   திருநாவுக்கரசர்   தேவாரம்   தோடு உலாம் மலர்கள் தூவித்
பண் - திருநேரிசை   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=QMgykSuuVcE
Audio: https://www.youtube.com/watch?v=0EPWtzYuzW0
6.082   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்
பண் - திருத்தாண்டகம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=7q7wO_NpGbU

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.038   நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருச்சாய்க்காடு (சாயாவனம்) ; (திருத்தலம் அருள்தரு குயிலுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு சாயாவனேசுவரர் திருவடிகள் போற்றி )
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் தூவி,
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்
மத்தயானையின் கோடும் வண் பீலியும் வாரி,
தத்து நீர்ப் பொன்னி, சாகரம் மேவு சாய்க்காடே.

[1]
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும்,
வெண்தலைக் கருங்காடு உறை, வேதியன் கோயில்
கொண்டலைத் திகழ் பேரி முழங்க, குலாவித்
தண்டலைத்தடம் மா மயில் ஆடு சாய்க்காடே.

[2]
நாறு கூவிளம், நாகுஇளவெண்மதியத்தோடு
ஆறு, சூடும் அமரர்பிரான் உறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை,
தாறு தண் கதலிப் புதல், மேவு சாய்க்காடே.

[3]
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை, மருவார்
புரங்கள்மூன்றும் பொடிபட எய்தவன், கோயில்
இரங்கல் ஓசையும் ஈட்டிய சரக்கொடும் ஈண்டி,
தரங்கம் நீள்கழித் தண் கரை வைகு சாய்க்காடே.

[4]
ஏழைமார் கடைதோறும், இடு பலிக்கு என்று,
கூழைவாள்_அரவு ஆட்டும் பிரான் உறை கோயில்
மாழை_ஒண்கண் வளைக்கை நுளைச்சியர், வண் பூந்
தாழை வெண்மடல் கொய்து, கொண்டாடு சாய்க்காடே.

[5]
துங்க வானவர் சூழ் கடல் தாம் கடைபோதில்,
அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில்
வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும்
சங்கும் வாரி, தடங்கடல் உந்து சாய்க்காடே.

[6]
வேத நாவினர், வெண்பளிங்கின் குழைக் காதர்,
ஓத_நஞ்சு அணி கண்டர், உகந்து உறை கோயில்
மாதர் வண்டு, தன் காதல்வண்டு ஆடிய புன்னைத்
தாது கண்டு, பொழில் மறைந்து, ஊடு சாய்க்காடே.

[7]
இருக்கும் நீள்வரை பற்றி அடர்த்து, அன்று எடுத்த
அரக்கன் ஆகம் நெரித்து, அருள்செய்தவன் கோயில்
மருக் குலாவிய மல்லிகை, சண்பகம் வண் பூந்
தரு, குலாவிய தண்பொழில் நீடு சாய்க்காடே.

[8]
மாலினோடு அயன் காண்டற்கு அரியவர், வாய்ந்த
வேலை ஆர் விடம் உண்டவர், மேவிய கோயில்
சேலின் நேர் விழியார் மயில்_ஆல, செருந்தி
காலையே கனகம்மலர்கின்ற சாய்க்காடே.

[9]
ஊத்தைவாய்ச் சமண்கையர்கள் சாக்கியர்க்கு என்றும்
ஆத்தம்_ஆக அறிவு அரிது_ஆயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே,
பூத்த வாவிகள் சூழ்ந்து, பொலிந்த சாய்க்காடே.

[10]
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை,
ஞானசம்பந்தன் காழியர்கோன் நவில் பத்தும்
ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம், போய்,
வானநாடு இனிது ஆள்வர், இம் மாநிலத்தோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.041   மண் புகார், வான்புகுவர்; மனம்  
பண் - சீகாமரம்   (திருத்தலம் திருச்சாய்க்காடு (சாயாவனம்) ; (திருத்தலம் அருள்தரு குயிலுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு சாயாவனேசுவரர் திருவடிகள் போற்றி )
மண் புகார், வான்புகுவர்; மனம் இளையார்; பசியாலும்
கண் புகார்; பிணி அறியார்; கற்றாரும் கேட்டாரும்
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடுவீதித்
தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே.

[1]
போய்க் காடே மறைந்து உறைதல் புரிந்தானும், பூம் புகார்ச்
சாய்க்காடே பதி ஆக உடையானும், விடையானும்,
வாய்க் காடு முதுமரமே இடம் ஆக வந்து அடைந்த
பேய்க்கு ஆடல் புரிந்தானும், பெரியோர்கள் பெருமானே.

[2]
நீ நாளும், நன்நெஞ்சே, நினைகண்டாய்! ஆர் அறிவார்,
சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப, புகழ் நாமம் செவி கேட்ப,
நா நாளும் நவின்று ஏத்த, பெறல் ஆமே, நல்வினையே.

[3]
கட்டு அலர்த்த மலர் தூழிக் கைதொழுமின் பொன் இயன்ற
தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும்
தாழ்பொழில்வாய்,
மொட்டு அலர்த்த தடந்தாழை முருகு உயிர்க்கும்
காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே!

[4]
கோங்கு அன்ன குவிமுலையாள், கொழும் பணைத்தோள்
கொடியிடையைப்
பாங்கு என்ன வைத்து உகந்தான், படர்சடைமேல்
பால்மதியம்
தாங்கினான் பூம் புகார்ச் சாய்க்காட்டான்; தாள் நிழல் கீழ்
ஓங்கினார், ஓங்கினார் என உரைக்கும், உலகமே.

[5]
சாந்து ஆக நீறு அணிந்தான், சாய்க்காட்டான், காமனை
முன்
தீந்து ஆகம் எரி கொளுவச் செற்று உகந்தான்,
திருமுடிமேல்
ஓய்ந்து ஆர மதி சூடி, ஒளி திகழும் மலைமகள் தோள்
தோய்ந்து ஆகம் பாகமா உடையானும், விடையானே.

[6]
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடுவீதி,
சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான்
கொங்கு உலா வரிவண்டு இன் இசை பாடும்
அலர்க்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள்
அலவே.

[7]
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும்
எரியுண்ண,
பட அரவத்து எழில் ஆரம் பூண்டான், பண்டு
அரக்கனையும்
தடவரையால் தடவரைத்தோள் ஊன்றினான், சாய்க்காட்டை
இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர்
இலையே.

[8]
வையம் நீர் ஏற்றானும், மலர் உறையும் நான்முகனும்,
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால், அவன் பெருமை;
தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம்பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவு உடைமை தேறோமே.

[9]
குறங்கு ஆட்டும் நால்விரல் கோவணத்துக்கு உலோவிப்
போய்
அறம் காட்டும் சமணரும், சாக்கியரும், அலர் தூற்றும்
திறம் காட்டல் கேளாதே, தெளிவு உடையீர்! சென்று
அடைமின்,
புறங்காட்டில் ஆடலான் பூம் புகார்ச் சாய்க்காடே!

[10]
நொய்ம் பந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல் அடியார்
அம் பந்தும் வரிக் கழலும் அரவம் செய் பூங் காழிச்
சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
எம் பந்தம் எனக் கருதி, ஏத்துவார்க்கு இடர் கெடுமே.
[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.065   தோடு உலாம் மலர்கள் தூவித்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருச்சாய்க்காடு (சாயாவனம்) ; (திருத்தலம் அருள்தரு குயிலின்நன்மொழியம்மை உடனுறை அருள்மிகு சாயவனேசுவரர் திருவடிகள் போற்றி )
தோடு உலாம் மலர்கள் தூவித் தொழுது எழு மார்க்கண்டேயன்
வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன்
பாடு தான் செலலும், அஞ்சி, பாதமே சரணம் என்ன,
சாடினார், காலன் மாள; சாய்க்காடு மேவினாரே.

[1]
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல்-தேவர் அஞ்சி
அடைந்து, நும் சரணம் என்ன, அருள் பெரிது உடையர் ஆகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே.

[2]
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன்
வரணியல் ஆகித் தன் வாய் நூலினால் பந்தர் செய்ய,
முரண் இலாச் சிலந்தி தன்னை முடி உடை மன்னன் ஆக்கித்
தரணி தான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே.

[3]
அரும் பெருஞ் சிலைக் கை வேடனாய், விறல் பார்த்தற்கு, அன்று(வ்)
உரம் பெரிது உடைமை காட்டி, ஒள் அமர் செய்து, மீண்டே
வரம் பெரிது உடையன் ஆக்கி, வாள் அமர் முகத்தில் மன்னும்
சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.

[4]
இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களே
மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த,
தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று,
சந்திரற்கு அருள் செய்தாரும் சாய்க்காடு மேவினாரே.

[5]
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து
பூ மலி கொன்றை சூட்டப் பொறாத தன் தாதை தாளைக்
கூர் மழு ஒன்றால் ஓச்ச, குளிர் சடைக் கொன்றை மாலைத்-
தாமம் நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.

[6]
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட,
ஐயம் இல் அமரர் ஏத்த, ஆயிரம் முகம் அது ஆகி
வையகம் நெளியப் பாய்வான் வந்து இழி கங்கை என்னும்
தையலைச் சடையில் ஏற்றார்-சாய்க்காடு மேவினாரே.

[7]
குவப் பெருந் தடக்கை வேடன், கொடுஞ்சிலை இறைச்சிப்பாரம்,
துவர்ப் பெருஞ் செருப்பால் நீக்கி, தூய வாய்க் கலசம் ஆட்ட,
உவப் பெருங் குருதி சோர, ஒரு க(ண்)ண்ணை இடந்து அங்கு அப்பத்
தவப் பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே.

[8]
நக்கு உலாம் மலர் பல்-நூறு கொண்டு நல் ஞானத்தோடு
மிக்க பூசனைகள் செய்வான், மென்மலர் ஒன்று காணாது,
ஒக்கும், என் மலர்க்கண் என்று அங்கு ஒரு க(ண்)ண்ணை இடந்தும் அப்ப,
சக்கரம் கொடுப்பர் போலும்-சாய்க்காடு மேவினாரே.

[9]
புயம் கம் ஐஞ்-ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடிச்
சிவன் திருமலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்ச,
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி, மீண்டே
சயம் பெற நாமம் ஈந்தார்-சாய்க்காடு மேவினாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.082   வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருச்சாய்க்காடு (சாயாவனம்) ; (திருத்தலம் அருள்தரு குயிலின்நன்மொழியம்மை உடனுறை அருள்மிகு சாயவனேசுவரர் திருவடிகள் போற்றி )
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் வளர் சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்;
தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும்;
ஞானத்தின் ஒண் சுடர் ஆய் நின்றார் போலும்; நன்மையும் தீமையும் ஆனார் போலும்;
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

[1]
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும்;   வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும்;
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும்; அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்;
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும்
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண்நீர்த் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

[2]
கான் இரிய வேழம் உரித்தார் போலும்; காவிரிப் பூம்பட்டினத்து உள்ளார் போலும்;
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும்; வட கயிலை மலை அது தம் இருக்கை போலும்;
ஊன் இரியத் தலை கலனா உடையார் போலும்; உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும்
தேன் இரிய மீன் பாயும் தெண்நீர்ப் பொய்கைத் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

[3]
ஊன் உற்ற வெண்தலை சேர் கையர்போலும்; ஊழி பல கண்டு இருந்தார் போலும்;
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும்; மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்;
கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

[4]
கார் மல்கு கொன்றை அம்தாரார் போலும்; காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும்;
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும்; பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும்;
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும்; ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்;
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

[5]
மா வாய் பிளந்து உகந்த மாலும், செய்ய- மலரவனும், தாமேயாய் நின்றார் போலும்;
மூவாத மேனி முதல்வர் போலும்; முதுகுன்றமூதூர் உடையார் போலும்;
கோ ஆய முனிதன்மேல் வந்த கூற்றைக் குரை கழலால், அன்று, குமைத்தார் போலும்;
தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

[6]
கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும்; காரோணத்து என்றும் இருப்பார் போலும்;
இடி குரல் வாய்ப் பூதப்படையார் போலும்;   ஏகம்பம் மேவி இருந்தார் போலும்;
படி ஒருவர் இல்லாப் படியார் போலும்;   பாண்டிக்கொடு முடியும் தம் ஊர் போலும்;
செடி படு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும்  திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

[7]
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும்; வெண்நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும்;
மலையினார் மங்கை மணாளர் போலும்; மாற்பேறு காப்பு ஆய் மகிழ்ந்தார் போலும்;
தொலைவு இலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும்; சோற்றுத்துறை, துருத்தி, உள்ளார் போலும்;
சிலையின் ஆர் செங்கண் அரவர் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

[8]
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்; அமருலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சிபோலும்;
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்; நள்ளாறு நாளும் பிரியார் போலும்;
முல்லை முகை நகையாள் பாகர் போலும்; முன்னமே தோன்றி முளைத்தார் போலும்;
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

[9]
உறைப்பு உடைய இராவணன் பொன்மலையைக் கையால்  ஊக்கம் செய்து எடுத்தலுமே, உமையாள் அஞ்ச,
நிறைப் பெருந்தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர, விரல் வைத்த நிமலர் போலும்;
பிறைப்பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும்; பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும்;
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list